மாவட்ட செய்திகள்

தேனியில் கோடை கால தொடக்கத்திலேயே சுட்டெரிக்கும் வெயில் - பரிதவிக்கும் மக்கள்

தேனியில் கோடை கால தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. வாட்டி வதைக்கும் வெயில் மக்களை பரிதவிக்க வைத்துள்ளது.

தேனி,

சில ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலம் வந்து விட்டால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தேனி மாவட்டத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள். அந்த அளவுக்கு குளு,குளுவென இந்த மாவட்டப் பகுதிகள் திகழ்ந்தது. ஆனால், தற்போது கோடை காலம் வந்து விட்டால் குளிர்ச்சியான இடம் தேடி எங்கே செல்லலாம்? என்று தேனி மாவட்ட மக்களே எண்ணும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. இங்குள்ள வனப் பகுதிகள் வளம் இழந்துள்ளதும், சாலை விரிவாக்கம், குடியிருப்பு விரிவாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான மரங்களை கடந்த 10 ஆண்டுகளில் இழந்து விட்டதும் முக்கிய காரணங்கள் ஆகும். கோடையிலும் தண்ணீர் கொட்டும் சுருளி அருவி கடந்த மாதமே வறண்டு விட்டது. கும்பக்கரை அருவியும் வறட்சியின் பிடியில் தான் சிக்கி உள்ளது. மலையடிவார பகுதிகளில் காட்டாறுகள், நீரோடைகள் வறண்டு கிடக்கின்றன. இவ்வாறு பசுமையை இழந்து விட்டதால், வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.

மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலம் ஆகும். மார்ச் மாதம் தொடங்கி உள்ள நிலையில், தற்போதே கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த வெயிலினால் மாலை 5 மணி வரை கடுமையான வெப்பத்தை உணர முடிகிறது.

நேற்று தேனி நகரில் 98.6 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. சாலைகள் அனலை கக்கியது போல் நெருப்பாய் தகதகத்தது. சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து சென்ற மக்களும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டும், முகத்தில் துணியை கட்டிக் கொண்டும் சென்றனர். பெண்கள் பலர் குடை பிடித்துச் சென்றதை பார்க்க முடிந்தது.

கோடை காலம் வந்து விட்டாலே இளநீர், சர்பத், கம்பங்கூழ் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை களை கட்டும். அதன்படி, சமீப காலமாக சாலையோரம் இளநீர், சர்பத், கம்பங்கூழ், பழச்சாறு, குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகள் புதிது புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. சில மீட்டர் இடைவெளியில் தேனி நகரின் பிரதான சாலைகளில் இதுபோன்ற கடைகள் அமைந்துள்ளன. உடல் சூட்டை தணிப்பதற்காகவும், வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் இதுபோன்ற கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தற்போதே மக்களை வெயில் பரிதவிக்க வைத்துள்ளது. கோடை காலத்தை எப்படி கடக்கப் போகிறோமோ? என்ற பயம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இடையிடையே கோடை மழை கைகொடுத்தால் மட்டுமே வெயிலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதோடு, குடிநீர் தட்டுப்பாட்டையும் சமாளிக்க முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...