கருப்பூர்,
சேலம் குகை பஞ்சந்தாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பச்சியப்பன்(வயது 60). இவருடைய மகன் ஜெகநாதன் (26). இவருக்கும், ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டி அருகே உள்ள பாப்பிசெட்டிபட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகள் அனிதாவுக்கும்(22) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 10 நாட்களிலேயே கணவன்மனைவி இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் ராயவேலூரில் உள்ள தனது மாமன் மகன் லட்சுமணன்(27) என்பவரை அனிதா 2வது திருமணம் செய்து கொண்டார். லட்சுமணன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்ததால் 2 பேரும் சென்னையில் வசித்தனர்.
இதற்கிடையே அனிதாவின் முதல் கணவர் ஜெகநாதனின் தந்தை பச்சியப்பன், ராயவேலூருக்கு வந்தார். அங்கு அவர் அனிதாவின் உறவினர்களை சந்தித்து திருமணம் ஆன 10 நாளிலேயே தனது மகனுடன் வாழாமல் அனிதா வந்து விட்டதால், திருமணத்திற்கு ஆன செலவு தொகையை திருப்பி தரும்படி கேட்டார்.
அப்போது ரூ.50ஆயிரம் திருப்பி தருவதாக கூறி ரூ.10 ஆயிரத்தை அனிதாவின் உறவினர்கள் முதலில் கொடுத்தனர். மேலும் பாக்கி தொகை ரூ.40 ஆயிரத்தை விரைவில் தருவதாகவும் கூறினர்.
இந்த சம்பவம் ஒருபுறம் இருக்க சென்னையில் வசித்து வந்த அனிதாவும், அவருடைய கணவர் லட்சுமணனும் அங்கு ஆட்டோ தொழில் சரிவர நடைபெறாததால், அங்கிருந்து பாப்பிசெட்டிபட்டிக்கு சமீபத்தில் திரும்பி வந்தனர். பின்னர் அங்கு லட்சுமணன் ஸ்டவ் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இதையறிந்த பச்சியப்பன் நேற்று முன்தினம் பாப்பிசெட்டிப்பட்டிக்கு வந்தார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த அனிதாவிடம் திருமண செலவு ரூ.40 ஆயிரத்தை திருப்பி தருமாறு கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து ஊருக்கு திரும்பி செல்ல பச்சியப்பன் புதுரோடு பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
இதனிடையே வீட்டிற்கு வந்த தனது கணவர் லட்சுமணன், அண்ணன் சண்முகம் ஆகியோரிடம் அனிதா நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் புதுரோடு பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பச்சியப்பனை உருட்டுக்கட்டையால் அடித்ததுடன், கற்களால் சரமாரியாகவும் தாக்கினர். இதில் நிலைகுலைந்து பச்சியப்பன் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பச்சியப்பனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதையடுத்து பச்சியப்பன் கொலை சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனிதா, அவருடைய கணவர் லட்சுமணன், அண்ணன் சண்முகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
திருமண செலவை திருப்பி தர கேட்டு வந்த மாமனாரை, பெண் தனது 2வது கணவர், அண்ணனுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.