மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி உத்தரபிரதேச தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

சேலத்தில் தங்கியுள்ள உத்தரபிரதேச தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

சேலம்,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சேலம் மாவட்டம் பனங்காடு, சிவதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறைகளில் வேலை செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதால் உத்தரபிரதேச தொழிலாளர்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக சேலத்திலேயே தங்கியுள்ளனர்.

வெள்ளி பட்டறைகளும் மூடப்பட்டிருப்பதால் அவர்களுக்கு வேலை சரிவர இல்லை. இதனால் உணவு சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே சேலத்தில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

முற்றுகையிட முயற்சி

இதுபற்றி அறிந்த உத்தரபிரதேச தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், சேலத்தில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறைகளில் பணிபுரிந்து வருவதாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாக பஸ் போக்குவரத்து இல்லாததால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லமுடியாமல் இருப்பதாகவும், எனவே எங்கள் சொந்த ஊரான உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் சிவதாபுரம், பனங்காடு பகுதியில் வசித்து வருவதால் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் உங்களது பெயர், முகவரி, சொந்த மாநிலம் போன்ற விவரங்களை தெரிவித்து அவர் மூலம் மாவட்ட கலெக்டரை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை உத்தரப் பிரதேச மாநில தொழிலாளர்கள் முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...