பெங்களூரு,
பெங்களூரு பசவனகுடியில் உள்ள புல் டெம்பிள் ரோட்டில் தொட்டபசவண்ண கோவில் அமைந்து இருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கன்னட கார்த்திகை மாதம் கடைசி வாரம் திங்கட்கிழமை அன்று கடலைக்காய் திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, பெங்களூரு தொட்டபசவண்ண கோவிலில் நேற்று கடலைக்காய் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவை பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே தொடங்கி வைத்தார். கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த துலாபாரத்தில் தொட்ட பசவண்ண சிலைக்கு நிகராக கடலைக்காய்களை வைத்து அவர் கடலைக்காய் திருவிழாவை தொடங்கி வைத்தார். அவருடன் கர்நாடக மேல்-சபை உறுப்பினர் டி.ஏ.சரவணா, எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள் உடன் இருந்தனர். முன்னதாக, கோவிலில் உள்ள விநாயகர் சிலை, நந்தி சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கடலைக்காய் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், மேயர் கங்காம்பிகே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவை நிர்மானித்த கெம்பேகவுடா காலத்தில் இருந்து கடலைக்காய் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவீன காலத்தில் கடலைக்காய் திருவிழா பற்றி அதிகளவிலான மக்கள் அறிந்து கொள்ளவில்லை. இதனால் தொட்ட பசவண்ண கோவிலை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திருவிழாவில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கடலைக்காய் திருவிழா தொடங்கியதை தொடர்ந்து தொட்ட பசவண்ண கோவிலை சுற்றியுள்ள சாலைகளின் இருபுறமும் வியாபாரிகள் கடலைக்காய்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். முதல் நாளான நேற்று ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கடலைக்காய் வாங்கி சென்றனர். இதனால் புல்டெம்பிள் ரோட்டில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த கடலைக்காய் திருவிழாவில் கர்நாடகத்தில் உள்ள கோலார், சிக்பள்ளாப்பூர், ராமநகர் உள்பட பிற பகுதிகளில் இருந்தும், தமிழ்நாடு, ஆந்திரா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கடலைக்காய் விற்பனை செய்கிறார்கள். இந்த கடலைக்காய் திருவிழா நாளையுடன் (புதன்கிழமை) முடிவடைய உள்ளது.
மேலும் கடலைக்காய் திருவிழாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் கோவிலை சுற்றி 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.