நாமக்கல்:
கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறி கண்டறியப்பட்டு உள்ள நிலையில், நாமக்கல் கோழிப்பண்ணைகளில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்ணைகளின் முகப்பு வாயிலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த தண்ணீரை நிரப்பி, அதில் கால்களை கழுவிய பின்னரே தொழிலாளர்களை பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். இதேபோல் கோழிகளுக்கும் ஸ்பிரே மூலம் கிருமிநாசினி தெளிக்கின்றனர். சில பண்ணைகளில் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
கோழிப்பண்ணைகளுக்கு முட்டை, கோழி மற்றும் கோழி எரு ஏற்ற வரும் அனைத்து வாகனங்களும் கிருமிநாசினி கலந்த தண்ணீர் தெளித்த பின்னரே பண்ணைகளுக்குள் அனுமதிக்கபடுகின்றன. இதுபோன்ற பல்வேறு உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பண்ணைகளில் வெளி ஆட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. முட்டை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் அட்டைகளை கிருமிநாசினி கலந்த தண்ணீரில் நன்கு சுத்தம் செய்த பின்னரே பயன்படுத்துகின்றனர்.
ரத்த மாதிரிகள் சேகரிப்பு
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நாமக்கல் மண்டலத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதிக இறப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். இதுதவிர மாதந்தோறும் ரத்த மாதிரிகள் சேகரித்து, போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வருகிறோம். இதுவரை நமது மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் இல்லை. இங்குள்ள பண்ணைகள் சர்வதேச தரத்தில் பராமரிக்கப்பட்டு வருவதால், நோய் கிருமிகள் பரவ வாய்ப்பு இல்லை. எனவே பண்ணையாளர்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.