தூத்துக்குடி,
தூத்துக்குடியில் மறைந்த பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மரணம்
தூத்துக்குடி ஆசிரியர் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் எஸ்.ஆர்.சரவணபெருமாள் (வயது 58). இவர் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வந்தார். 1985ம் ஆண்டு முதல் கட்சியில் மாவட்ட அமைப்பாளர், மாவட்ட தலைவர், கோட்ட பொறுப்பாளர், மாநில செயலாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து உள்ளார்.
இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார்.
அஞ்சலி
இதைத் தொடர்ந்து அவரது உடல் தூத்துக்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் மோகன்ராஜீலு, மாநில செயலாளர்கள் நரேந்திரன், புரட்சிகவிதாசன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாளின் உடல் இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தூத்துக்குடியில் உள்ள பொது மையவாடியில் அடக்கம் செய்யப்படுகிறது.
3 நாள் துக்கம்
இதுகுறித்து பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது, பா.ஜனதா கட்சி பொதுச்செயலாளர் சரவணபெருமாள் இயக்கத்துக்காக தனது வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து உழைத்தவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்துக்கு பா.ஜனதா கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பா.ஜனதா சார்பில் 3 நாள் முழுமையான துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என்றார்.
இதுகுறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறும் போது, தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் சரவணபெருமாள். அவரது இழப்பு பா.ஜனதாவுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பு. அவரது பிரிவு தாங்கமுடியாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. கட்சி பணி மட்டுமின்றி, தமிழுக்கும் பல்வேறு பணிகளை செய்து உள்ளார். அவரது இழப்பை தாங்கும் மனவலிமையை அவருடைய குடும்பத்தினருக்கு இறைவன் அளித்திட வேண்டும் என்றார்.