மும்பை,
நாட்டில் உள்ள உயிரியல் பூங்காக்களிலேயே மும்பை பைகுல்லாவில் உள்ள ராணி பார்க் உயிரியல் பூங்காவில் மட்டும் தான் பென்குயின்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. மும்பை மாநகராட்சி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் தென் கொரியா நாட்டில் இருந்து 8 பென்குயின் பறவைகள் வாங்கியது.
குளிர்பிரதேசத்தில் மட்டுமே வாழும் பென் குயின் பறவைகளுக்கு ஏற்ப மும்பையில் தட்பவெட்பநிலை இல்லை என்பதால் ராணி பார்க் பூங்காவில் வைத்து பராமரிக்க விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் பல லட்சம் செலவில் பிரத்யேக வசிப்பிடத்தை உருவாக்கி அந்த பென்குயின்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
இவற்றில் 5 பெண் பென்குயின்கள். 3 ஆண் பெண் குயின்கள் ஆகும். இதில் ஒரு பென்குயின் திடீரென நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தது. மற்ற பென்குயின்கள் பிலிப்பர், ஆலிவ், பப்பிள், டோனால்டு, டெய்சி, போபேயே, மோல்ட் என பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, பைகுல்லா உயிரியல் பூங்காவில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ள அந்த 7 பென்குயின்களை தினசரி ஏராளமானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பென்குயின்களில் மூத்த பென்குயினான 4 வயது பிலிப்பர் பெண் பென்குயின், 3 வயது மோல்ட் ஆண் பென்குயினுடன் ஜோடி சேர்ந்தது. இதன் பலனாக கடந்த மாதம் 5-ந் தேதி பிலிப்பர் பென்குயின் முட்டையிட்டது.