திருவொற்றியூர்,
நகைபணம் கொள்ளை
திருவொற்றியூரை அடுத்த மணலி பி.ஆர்.கே. சர்மா தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (வயது 62). இவரது மனைவி ஜெசி. கடந்த 4ந் தேதி கணவன்மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு போரூரில் உள்ள தங்களது மகள் வீட்டிற்கு சென்றனர்.
நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிமணி உள்ளிட்ட பொருட்கள் சிதறிக்கிடந்தது.
மேலும், அதில் இருந்த 25 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து சுந்தரமூர்த்தி மணலி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர்.
எப்போதும் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.