வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 55). இவருடைய மனைவி ஈஸ்வரி (51). இவர்களது மகன் மகுடீஸ்வரன் (24). அவர் வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டியில் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு மகுடீஸ்வரன் புறப்பட்டு சென்றார். அவருடன் அதே ஊரை சேர்ந்த தொழிலாளிகள் மலைச்சாமி (35), மணி (25) ஆகியோரும் சென்றனர்.
மோட்டார் சைக்கிளை மகுடீஸ்வரன் ஓட்டிச் சென்றார். திண்டுக்கல்-வேடசந்தூர் ரோட்டில் காக்காத்தோப்பு பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகுடீஸ்வரன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் அணிந்து இருந்த ஹெல்மெட் நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.
படுகாயம் அடைந்த மலைச்சாமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், மணியை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பெத்தாச்சி நகரை சேர்ந்த சரவணன் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே விபத்தில் மகுடீஸ்வரன் இறந்த தகவலை வீட்டில் இருந்த அவருடைய தாய் ஈஸ்வரியிடம் தெரிவித்தனர். உடனே அவர் அய்யோ, என் மகனே என கூச்சலிட்டு கதறி அழுதார். சிறிது நேரத்தில் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை, அருகில் இருந்த உறவினர்கள் தட்டி எழுப்பினார்கள். ஆனால் அவர் எழும்பவில்லை. மகன் இறந்த அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
இதைப்பார்த்த உறவினர்கள், மகன் இறந்த சற்று நேரத்தில் தாயும் உயிரை பறிகொடுத்துவிட்டாளே என்று கதறியது அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவத்தால், நேற்று அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.