சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புக்கான தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக கடைகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நாளை (புதன் கிழமை) முதல் இயங்கலாம். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி பணி வளாகத்தில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் மற்றும் டிரைவர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை இயக்குவதற்காக slmdc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இந்த நிறுவனங்களில் சேலம் மாவட்டத்திற்குட்பட்டவர்கள் மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார், தொழிலக பாதுகாப்பு துறை இணை இயக்குனர் புகழேந்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.