மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரண நிதி வாங்க ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி இன்றி கூடும் பொதுமக்கள் தொற்று பரவும் அபாயம்

கொரோனா நிவாரண நிதி வாங்க ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி இன்றி கூடும் பொதுமக்களால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடமலைக்குண்டு:

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக அரிசி ரேஷன்கார்டுகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரு வாரியாக பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் டோக்கன் பெற்ற பொதுமக்கள் நிவாரண தொகை பெறுவதற்காக ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளின் முன்பு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒன்று கூடுகின்றனர். இதில் பெரும்பாலானோர் முக கவசம் அணிவதில்லை. ஏற்கனவே கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதால் கொரோனா தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே நிவாரண தொகை வழங்கப்படும் நாட்களில் ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். அல்லது பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவிலான டோக்கன்களுக்கு மட்டுமே நிவாரண தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.