மாவட்ட செய்திகள்

ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைத்தார்கள்- காலாவதியான பொருட்கள் பறிமுதல்

பெரம்பலூரில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி, ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர்,

அதிரடி சோதனை

பெரம்பலூர் பழைய பஸ்நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பழக்கடைகள் உள்ளிட்டவற்றில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் தலைமையில் அலுவலர்கள் சின்னமுத்து, அழகுவேல் உள்ளிட்டோர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சில கடைகளில் சாக்லெட், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட தின்பண்டங்கள் மற்றும் குளிர்ப்பானங்கள் காலாவதியாகி இருந்தது தெரியவந்தது. மேலும் அங்கு உணவு பாதுகாப்பு தர சான்றிதழ் பெறாத நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகள் உள்ளிட்டவை விற்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

ரசாயனம்

இதேபோல் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள சில மளிகை கடைகள், வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அங்கு காலாவதியான மைதா மாவு, பிளச்சிங் செய்யப்பட்ட வெல்லம் உள்ளிட்டவை விற்கப்பட்டது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிளச்சிங் செய்யப்பட்ட வெல்லத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படக்கூடும் என்று தெரிவித்தனர்.

மேலும் பழக்கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, எத்திப்பான் என்ற ரசாயன மருந்தை தெளித்து வாழைத்தார்கள் பழுக்க வைக்கப்பட்டது தெரியவந்தது. அங்கிருந்து ரசாயனம் தெளிக்கப்பட்ட வாழைத்தார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சில கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொருட்கள் அழிப்பு

உணவு பாதுகாப்பு துறையினரால் கைப்பற்றப்பட்ட காலாவதியான சாக்லெட், பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்கள், புகையிலை பொருட்கள், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள் உள்ளிட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள மளிகை கடைகள், வணிக நிறுவனங்கள், பழக் கடைகள் உள்ளிட்டவற்றிற்கு மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். எனவே தரமில்லாத பொருட்களை மக்கள் வாங்கி விடக்கூடாது என்கிற நோக்கத்தில் தான் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளில், அந்த பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்து கூறியிருக்கிறோம். தொடர்ந்து இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.