மாவட்ட செய்திகள்

முழுகொள்ளளவை எட்டியதால் ஹாரங்கி அணையில் மந்திரி சுரேஷ் குமார் சமர்ப்பண பூஜை

ஹாரங்கி அணை முழுகொள்ளளவை எட்டியதால் நேற்று மந்திரி சுரேஷ் குமார் அணைக்கு சென்று சமர்ப்பண பூஜை செய்து வழிபட்டார்.

குடகு,

குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையால் சோமவார்பேட்டை தாலுகா குஷால் நகர் அருகே அமைந்திருக்கும் ஹாரங்கி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்று குடகு மாவட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பு மந்திரி சுரேஷ் குமார் வந்தார். அவர் ஹாரங்கி அணைக்கு சென்று சமர்ப்பண பூஜை செய்து, தண்ணீரில் பூஜை பொருட்களை வீசி வழிபட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடகு மாவட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும், பல விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் விவசாயம் செய்து பயனடைந்து வருகிறார்கள். மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும். அதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும், அச்சமும் வேண்டாம். பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரண உதவிகள் வந்து சேரும்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறார். இது தவறு. மத்திய அரசு கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.536 கோடியை ஒதுக்கி உள்ளது. மத்திய குழுவினர் கர்நாடகத்திற்கு வந்து மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து சென்றுள்ளனர். அவர்கள் மத்திய அரசிடம் அறிக்கை அளித்த பிறகு 2-வது கட்டமாக கர்நாடகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும்.

மேலும் மாநில அரசு சார்பில் வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்-மந்திரி எடியூரப்பா ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளார். மேலும் வருகிற 7-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவுக்கு வருகிறார். அப்போது அவரை முதல்-மந்திரி எடியூரப்பா நேரில் சந்தித்து கர்நாடகத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுப்பார்.

மேலும் குடகு மாவட்டத்திற்கு என்றும் தனியாக நிதி ஒதுக்கப்படும். அதற்கான எல்லா முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன். இதனால் சித்தராமையா ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க கூடாது.

இவ்வாறு மந்திரி சுரேஷ் குமார் கூறினார். பின்னர் அவர் அணையில் அமைந்திருக்கும் காவிரித்தாய் சிலைக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டார். அப்போது அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அனீஸ் கண்மணி ஜாய் மற்றும் அரசு அதிகாரிகள் மந்திரியுடன் இருந்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...