பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் கொரோனா பரவியது. அதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தவிர பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அனைத்து வகுப்பு மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நேற்று வகுப்புகள் தொடங்கின.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். அவர்கள் பள்ளி, பி.யூ. கல்லூரிகளில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். பள்ளி, பி.யூ. கல்லூரிகளுக்கு வந்த மாணவர்களுக்கு சானிடைசர் திரவம் வழங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் அரசு பள்ளிகள், பி.யூ. கல்லூரிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். பள்ளி, பி.யூ. கல்லூரிகளில் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வித்யாகம வகுப்புகள் தொடங்கின. மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திறந்தவெளியில் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தலை மேற்கொண்டனர். முதல் நாள் வகுப்பில் மாணவர்களுகஙகு பாடங்கள் நடத்தப்படவில்லை. கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி, கடந்த 9 மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறும்படி ஆசிரியர்கள் கேட்டு அறிந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியர்கள், கொரோனாவை கண்டு பயப்பட வேண்டாம் என்றும், தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தினர். அடுத்த வாரம் முதல் பாடம் கற்பித்தல் பணி தொடங்கவுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பீதியால் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. இன்னும் சில நாட்களில் மாணவர்கள் வருகை இயல்புநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், நீண்ட காலமாக வீடுகளில் முடங்கியிருந்த மாணவர்கள் சுதந்திர பறவைகளாக பள்ளி, பி.யூ. கல்லூரிகளுக்கு ஆர்வமாக வந்தனர். சில பள்ளிகளில் மாணவர்களுக்கு மேள-தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.