கோவில்பட்டி,
திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாஸ். இவருடைய மகன் ஜேசு ஜான் (வயது 25). இவர் கோவில்பட்டியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள குருவிக்குளத்தைச் சேர்ந்த செல்விக்கும் (24) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. புதுமண தம்பதியர் வடக்கு குருவிகுளத்தில் வசித்து வந்தனர்.
கர்ப்பிணி மனைவியை...
செல்வி தற்போது கர்ப்பமாக உள்ளார். எனவே, தலைப்பிரசவத்துக்காக அவரை பெற்றோர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து ஜேசுஜான், கோவில்பட்டியில் பணியாற்றும் ஜவுளிக்கடை ஊழியர்களுக்கான விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும் ஜேசு ஜான், தன்னுடைய மனைவியை பார்க்க குருவிக்குளத்துக்கு சென்றார். மனைவியை பார்த்துவிட்டு அங்கிருந்து, அவர் இரவில் தங்குவதற்காக, கோவில்பட்டியில் உள்ள ஜவுளிக்கடை விடுதிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கார் மோதி பலி
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகில் நாற்கர சாலையில் ஜேசு ஜான் சென்று கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவருக்கு, கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம் கோட்டயத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் சதீஷை(33) கைது செய்தார்.