திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த பிலிக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீசில் ஏட்டாக வேலைபார்த்து வந்தார். நேற்று காலை 11.30 மணிக்கு பிலிக்கல்பாளையத்தில் இருந்து ஒரு காரில் திருச்செங்கோடு நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை செந்தில்குமார் ஓட்டினார்.
திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூர் பனங்காடு என்ற இடத்தில் வந்தபோது எதிரே மற்றொரு கார் வந்தது. எதிர்பாராதவிதமாக 2 கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
எதிரே வந்த காரில் இருந்த சுப்பிரமணி என்ற முருகன் (45), சரவணன் (43) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் வெங்கடேசன் (43), ஹர்சித் ( 12), பிரியதர்ஷினி (9) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து வெங்கடேசனை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் இறந்தார்.
ஹர்சித், பிரியதர்ஷினி ஆகியோர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
பலியான வெங்கடேசன், குமாரபாளையம் காவிரி நகரைச் சேர்ந்தவர். இவர் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். வெங்கடேசனின் மகன் ஹர்சித்.
பலியான சுப்பிரமணி என்ற முருகன், குமாரபாளையத்தை அடுத்த குப்பாண்டபாளையம் காட்டுவளவை சேர்ந்தவர்.
சரவணன், குமாரபாளையத்தைச் சேர்ந்தவர். இவர் துபாயில் வே- ர்த்து வந்தார். இவருடைய மகள் பிரியதர்ஷினி. 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். சரவணன், பிரியதர்ஷினி, முருகன், ஹர்சித், வெங்கடேசன் ஆகியோர் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்தனர். சபரிமலைக்கு செல்வதற்காக அய்யப்ப பக்தர்களான இவர்கள் 5 பேரும் ஒரு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை வெங்கடேசன் ஓட்டிச்சென்றார். செல்லும் வழியில்தான் சித்தாளந்தூரில் நடந்த இந்த விபத்தில் சிக்கினர்.
பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.