மாவட்ட செய்திகள்

ஓடஓட விரட்டி புதுவை பெரிய மார்க்கெட் வியாபாரி வெட்டிக்கொலை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

புதுவை கோரிமேடு பகுதியில் பெரிய மார்க்கெட் வியாபாரி ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை திலாசுப்பேட்டை வீமன் நகர் கருணாஜோதி வீதியை சேர்ந்தவர் கவுதம் (வயது22). புதுவை பெரிய மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கவுதமுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் காமராஜர் சாலையில் உள்ள மதுக்கடைக்கு சென்றார்.

அப்போது மதுபான கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடந்துசென்ற கவுதமை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. அந்த கும்பலிடம் தப்பி காமராஜர் சாலையில் மெயின்ரோட்டில் கவுதம் ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தி ஓடஓட விரட்டி அவரை சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் நிலைகுலைந்த கவுதம் கோரிமேடு ஜிப்மர் நுழைவாயில் (பின்புறம்) அருகே ரத்தவெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள ஜிப்மர் மருத்துவமனை பகுதியில் நடந்த இந்த பயங்கர கொலை சம்பவத்தை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த கொலை சம்பவம் காரணமாக அந்த பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், இனியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்த கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே கவுதம் குறித்த விசாரணையில் போலீஸ்காரரை தாக்கியது உள்பட அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்த கொலையில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...