அதிர்ச்சி தகவல்
சென்னையில் உள்ள முக்கிய மேம்பாலங்களில் பாடி மேம்பாலமும் ஒன்றாகும். இந்த பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. எப்போதும் மிகுந்த பரபரப்புடன் காணப்படும் இந்த மேம்பாலம் கஞ்சா வியாபாரிகளின் புகலிடமாக மாறி இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
இந்த மேம்பாலத்தின் உறுதித்தன்மைக்காக பாலத்துக்கும், தூணுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு ஆள் நடந்து செல்லும் அளவுக்கு இரு புறங்களில் இடைவெளி இருக்கிறது. இப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்பது யாருக்கும் தெரிவது இல்லை. இந்த இடம் மர்ம குகை போன்று இருக்கிறது. எனவே இங்கு இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது.
துணிச்சலாக விற்பனை
கஞ்சா வியாபாரிகள் கிலோக்கணக்கில் கஞ்சா பொட்டலங்களை வரிசையாக அடுக்கி வைத்து துணிச்சலாக விற்பனை செய்கிறார்கள். குறைந்த விலையில் நிறைந்த போதை கிடைக்கிறது என்று இளைஞர்கள் அதிகளவில் கஞ்சாவை வாங்கி செல்கிறார்கள். இந்த பாலத்தின் கீழே போலீசார் ரோந்து வாகனம் செல்லும்போது சைரன் சத்தம் கேட்டால் கஞ்சா வியாபாரிகள் உஷாராகி விடுகிறார்கள். கஞ்சா வியாபாரிகள் அனைவரும் சட்டென்று ஆளுக்கொரு திசையில் சென்று இருளுக்குள் மறைந்துவிடுகிறார்கள். பின்னர் போலீசார் வாகனம் சென்றவுடன் கஞ்சா கடையை மீண்டும் திறந்து விடுகிறார்கள்.
திருநங்கைகளும் கூட்டணி
பாடி மேம்பாலம் அருகே இரவு நேரங்களில் சாலையோரமாக பளிச் மேக்கப், ஆண்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான ஆடை அணிந்து அணிவகுத்து நிற்கும் திருநங்கைகள், வாகனங்களில் தனியாக செல்லும் இளைஞர்களை குறி வைத்து மடக்குகிறார்கள். கஞ்சா வேண்டுமா? என்று கேட்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லும் அப்பாவி இளைஞர்களை மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
சென்னையின் முக்கிய பகுதியான பாடியில் கஞ்சா வியாபாரிகளும், திருநங்கைகளும் கூட்டணி அமைத்து மிகப்பெரிய சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை போலீசார் இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோரிக்கையாக இருக்கிறது.