கூடலூர்,
கூடலூர் தாலுகாவில் கடந்த ஆண்டு தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் ஓவேலி, கீழ்நாடுகாணி, மேங்கோரேஞ்சு உள்பட பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலைகள் சேதம் அடைந்து, போக்குவரத்து துண்டித்தது. அப்போது கூடலூரில் இருந்து ஓவேலிக்கு செல்லும் வழியில் உள்ள சேரன் நகரில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு பாலம் உடைந்தது. இதன் காரணமாக சேரன் நகர் வரை மட்டுமே வாகனங்கள் இயக்க முடிந்தது. அதற்கு அடுத்து உள்ள எல்லமலை, பெரியசோலை உள்பட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து தடைப்பட்டது.
எனினும் கூடலூரில் இருந்து செல்லும் பஸ்கள் ஆரோட்டுப்பாறை வழியாக பெரியசோலைக்கு இயக்கப்பட்டன. ஆனால் சேரன் நகர் வழியாக இயக்க முடியாததால், எல்லமலை பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் பள்ளி மாணவ-மாணவிகளும் மிகவும் அவதியடைந்தனர். எனவே சேரன் நகர் பாலத்தை சீரமைக்க வேண்டும் அல்லது பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் சேரன் நகரில் பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாமல் திடீரென கிடப்பில் போடப்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி மாணவ-மாணவிகள் சேரன்நகரில் புதிய பாலம் கட்டும் பணியை உடனே தொடங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்து சம்பவ இடத்துக்கு வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புதிய பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் பணி தொடங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து உறுதி அளித்தபடி சேரன் நகரில் புதிய பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக பழைய பாலம் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் ஆற்றின் இருபுறங்களையும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் வனத்துறையின் அனுமதி பெற்று ஜல்லிகற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது.
புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளதால், பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கடந்த பல மாதங்களாக பாலம் உடைந்து கிடந்ததால், நீண்ட தூரம் சுற்றி வெளியிடங்களுக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது புதிய பாலம் கட்டும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதற்கு எங்களது பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.