சிதம்பரம்,
சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற் படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டாக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கி, கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார். மாநில செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிதம் பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரியை முழுமையாக அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கவேண்டும். மேலும் இந்த கல்லூரியை சென்னை மருத்துவ கல்வி இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அரசு மருத்துவ கல்லூரிகளில் பணிபுரியும் மூத்த மருத்துவர் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், செவிலியர் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தை நிர்வாகம் வாங்க வேண்டும். சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையை, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியோடு இணைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் டாக்டர்கள் சிவகாமவள்ளி, குமாரதேவி, ராஜா சுப்பிரமணியன், விஜய ஆனந்த், கோபாலகிருஷ்ணன், மருத்துவ இளநிலை உதவியாளர் ரமேஷ், மருத்துவ ஊழியர் சுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.