மாவட்ட செய்திகள்

மங்கள விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா

மங்கள விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

கறம்பக்குடி,

கறம்பக்குடி திருவோணம் சாலையில் புகழ்பெற்ற மங்கள விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகருக்கு மண்டகபடிதாரர்கள் சார்பில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

நேற்று முன்தினம் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் கோவில் முன்பு மாவிளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் வாணவேடிக்கையும், பட்டிமன்றமும் நடந்தது.

இதேபோல் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ள முருகன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நேற்று நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி, மஞ்சள், உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.