கரூர்,
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி, அது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படாமல் அந்த சாலைகளில் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தால் மூட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் அந்தந்த இடங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் இரவு முதல் உடனடியாக மூடப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டன.
கரூர் நகராட்சி பகுதியில் 16 டாஸ்மாக் கடைகளும், குளித்தலையில் 3 கடைகளும், புலியூரில் 2, தளவாபாளையத்தில் ஒரு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. கரூர் டவுன் பகுதியில் பஸ் நிலையத்தை சுற்றி இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இயங்கி வந்த பார்களும் மூடப்பட்டு விட்டன. நேற்று பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறந்து விடும் என எண்ணி வந்த மதுபிரியர்கள், கடை மூடியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கடை திறக்கப்படாது என்றதும் ஏமாற்றமடைந்தனர். டாஸ்மாக் கடை வேறு எங்கு திறந்திருக்கிறது என அங்கிருந்தவர்களிடம் விசாரித்து சென்றனர். கரூர் டவுனில் மார்க்கெட் பகுதியில் மட்டும் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக டாஸ்மாக் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறுகையில், மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகளும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டு விட்டன. அடுத்த கட்டமாக அரசு எடுக்கும் நடவடிக்கையை தொடர்ந்து கடைகள் திறக்கப்படும். மூடப்பட்ட கடைகளின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.