மாவட்ட செய்திகள்

நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் கிரண்பெடி பேட்டி

புதுவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள் வழங்க வேண்டுமென கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் பெற எந்த தடையும் இல்லை. நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் இல்லை. நியமன எம்.எல்.ஏ.க்கள் பெற வேண்டிய உரிமைகள் குறித்து தலைமை செயலர் உரிய உத்தரவை பிறப்பித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, 3 பேருக் கும் எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

புதிய தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரி நிர்வாகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் விதிகளுக்கு உட்பட்டும், நடைமுறைகளைப் பின்பற்றியும் செயல்படுகிறார்கள். இது தொடர்ந்தால் 2018-ல் யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி சிறந்த யூனியன் பிரதேசமாக விளங்கும்.

புதுவையில் நிதி நெருக்கடி உள்ளது. தேவையற்ற செலவினங்களை நிர்வாகம் குறைக்க வேண்டும். பட்ஜெட்டுக்கு உட்பட்டு செலவு செய்ய வேண்டும். புதிய அறிவிப்புகள் வெளியிட்டால், அதற்குரிய நிதியை உற்பத்தி செய்ய வேண்டியது நமது கடமை.

இவ்வாறு அவர் கூறினார்.