விருதுநகர்
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர்களில் ஒருவரான 15 வயது சிறுவன் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தான்.
பாலியல் பலாத்காரம்
விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போது குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற 4 பேரும் சிறுவர்கள் ஆவர்.
மதுரை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களும் சிறார் நீதிமன்ற குழுவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவனான 15 வயது சிறுவனை, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
ரகசிய வாக்குமூலம்
இந்தநிலையில் நேற்று அந்த சிறுவன் விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு நிஷாந்தினி முன்பு சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டான்.
மாஜிஸ்திரேட்டிடம் அந்த சிறுவன் 1 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட ரகசிய வாக்குமூலம் சிறார் நீதிக்குழுமத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், இந்த சிறுவனை வழக்கில் இருந்து விடுவிப்பது தொடர்பாக சிறார் நீதிக்குழுமம் முடிவு எடுக்கும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.