மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பிரச்சினையால் மோதல்; மாட்டு கொட்டகைக்கு தீ வைப்பு

பெரியபாளையம் அருகே வீட்டுமனை பிரச்சினையால் மோதல்; மாட்டு கொட்டகைக்கு தீ வைப்பு.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள அக்கரபாக்கம் கிராமம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் செல்வம் (வயது 60). இவருக்கும், இவரது சகோதரர் மகன்களுக்கும் இடையே வீட்டுமனை தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செல்வம் மற்றும் அவரது அண்ணன் மகன் சுகுமார் (30) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினை மோதலாக வெடித்தது. இந்நிலையில், ஊரில் மின்சார தடை ஏற்பட்ட நேரத்தில் செல்வத்தின் குடிசைவீடு, வைக்கோல் போர், மாட்டுக்கொட்டகை ஆகியவற்றை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

இந்த தீ விபத்தில் குடிசைவீடு, வைக்கோல்போர், மாட்டு கொட்டகை அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. இதில் மாட்டு கொட்டகையில் கட்டிவைக்கப்பட்டிருந்த பசுமாட்டிற்கு படுகாயம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இது தொடர்பாக செல்வம் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.