கைதான தமிழ்குமரன்; வெடிகுண்டுகளை பரிசோதிக்க பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றதையும் படங்களில் காணலாம் 
மாவட்ட செய்திகள்

காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்குள் பைப்வெடிகுண்டு-பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவர் சிக்கினார்; காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடியில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டுக்கு பைப் வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வந்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டியவர் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காங்கிரஸ் பிரமுகர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கற்பக விநாயகர் நகரை சேர்ந்தவர் மாங்குடி (வயது 50). இவர் சங்கராபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மாவட்ட துணை தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இவரது மனைவி தேவி போட்டியிட்டார்.

இந்த தேர்தல் வெற்றி குறித்து இவர்களுக்கும், எதிர்த்தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் மாங்குடி வீட்டில் இருந்தார். அப்போது தமிழ் தேச மக்கள் கட்சி என்ற அமைப்பில் இருந்து வருவதாக தமிழ்குமரன் (40) என்பவர் அவரது வீட்டுக்கு வந்தார். அவர் மாங்குடியிடம், எங்களது கட்சி புத்தகத்தை உங்களுக்கு கொடுத்து நன்கொடை பெற வந்ததாக தெரிவித்துள்ளார்.

ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

இதையடுத்து அவரை வீட்டின் வரவேற்பு அறைக்கு மாங்குடி அழைத்துச் சென்றுள்ளார். பின் நன்கொடை குறித்து மாங்குடி கேட்டபோது, நான் அதற்காக வரவில்லை, எங்களது கட்சியை நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. அதற்காக நீங்கள் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் தமிழ்குமரன், தான் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு பைப் வெடிகுண்டு, ஒரு நாட்டு வெடிகுண்டு, இரண்டு கத்திகள், ஒரு சுத்தியல் ஆகியவற்றை எடுத்துக் காண்பித்து, உடனடியாக ரூ.1 கோடி ரூபாய் தரவேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக இருக்கும் அரசியல் முன்விரோதத்தை வைத்து கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. அதோடு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததும் நாங்கள் தான் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

போலீசில் பிடிபட்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த மாங்குடி, பணத்துக்கு ஏற்பாடு செய்வதாக அவரிடம் கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவலை தெரிவித்து வரவழைத்தார். அவர்கள் வந்ததும் மாங்குடி உள்ளிட்டோர் சேர்ந்து, தமிழ்குமரனை மடக்கி பிடித்து விட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து தமிழ்குமரனை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பிடிபட்ட நபர் கல்லலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன், கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன், சிவகங்கை துணை சூப்பிரண்டு வரதராஜன், காரைக்குடி துணை சூப்பிரண்டு அருண் மற்றும் உளவுப்பிரிவு, கியூ பிரிவு போலீசாரும் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். தமிழ்குமரனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை சிவகங்கை வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் குழு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று சோதனை மேற்கொண்டனர். மேலும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, மாங்குடியை சந்தித்து விவரம் கேட்டறிந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பைப் வெடிகுண்டு, நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுகளுடன் புகுந்து சிக்கியவரால் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...