பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி நகர மக்களுக்கு குப்பை வரி உள்ளிட்ட புதிதாக பல்வேறு வரிகளை விதித்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு வரிகளை விதிப்பது சரியல்ல என்று காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் புதிய வரி விதிப்புகளுக்கு எதிராகவும், மாநகராட்சி மேயர், அதிகாரிகளை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று பெங்களூரு மைசூரு வங்கி சர்க்கிளில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கரெட்டி, சவுமியா ரெட்டி, ரிஸ்வான் ஹர்ஷத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசுகையில் கூறியதாவது:-
கொரோனாவால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இந்த நேரத்தில், மாநகராட்சி புதிது, புதிதாக மக்களுக்கு வரிகளை விதித்து வருகிறது. இது சரியல்ல. மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. புதிய வரிகளை மாநகராட்சி உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அவர் கூறினார்.
இதுபோல மாநகராட்சியின் புதிய வரி விதிப்புகளை கண்டித்து ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ.வும் பேசினார். பின்னர் மைசூரு வங்கி சர்க்கிளில் இருந்து காங்கிரசார், மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் திறந்த வாகனத்தில் நின்று கொண்டு இருந்த டி.கே.சிவக்குமார், ரிஸ்வான் ஹர்ஷத், ராமலிங்கரெட்டி, சவுமியா ரெட்டி ஆகியோர் திடீரென கீழே இறங்கி காங்கிரஸ் கொடியை கையில் பிடித்து கொண்டு நடந்தே சென்றனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். இதுபோல காங்கிரசாரும் நடந்தே சென்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரசார் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது புதிய வரி விதிப்புகளை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பு உண்டானது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் காங்கிரசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
காங்கிரசாரின் இந்த போராட்டத்தில் மைசூரு வங்கி சர்க்கிள், டவுன்ஹால் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.