விழுப்புரம், டி
விழுப்புரம் மாவட்டத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூகநீதி போராளிகளுக்கு விழுப்புரம்- செஞ்சி சாலை அருகில் மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தினையும், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் நான்குமுனை சந்திப்பு அருகில் மணிமண்டபம் கட்டுவதற்கான இடம் தேர்வு குறித்து நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
2 மணி மண்டபம் கட்டும் பணி
21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில் ரூ.4 கோடி மதிப்பில் நினைவு மணிமண்டபமும், அதுபோல் முன்னாள் அமைச்சரும் ஏழை, எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பெரும் பங்காற்றி மறைந்த தனிப்பெரும் தலைவருமான ஏ.கோவிந்தசாமியின் நினைவாக ரூ.2.60 கோடி மதிப்பில் அவரது திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மணி மண்டபமும் அமைக்கப்படுகிறது. 2 மணி மண்டபமும் கட்டுவதற்கான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் டி.மோகன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் கோட்டாட்சியர் அரிதாஸ், தாசில்தார் ஆனந்தகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பரிதி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா உள்பட பலர் உடனிருந்தனர்.