மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பரமக்குடி,

தமிழ்நாட்டில் வருகிற 1- ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக பள்ளிகள் திறக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கு படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதையொட்டி பள்ளிக்கு வருவதற்குமுன் ஆசிரியர்கள், அலுவலர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்கான சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும். அவர்களுக்கு ஊதியம் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையொட்டி பரமக்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமிற்கு பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலர் சேதுராமன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் அஜ்மல்கான் முன்னிலை வகித்தார். டாக்டர் நந்தினி வரவேற்றார். இதில் மருந்தாளுநர் நித்யானந்தா, செவிலியர் சிலுவை மேரி, பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாம் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.