மாவட்ட செய்திகள்

கோபி தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்- கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோபி தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மறந்து ஆபத்தை உணராமல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச்சென்றார்கள். விதிகளை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கடத்தூர்

கோபி தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை மறந்து ஆபத்தை உணராமல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச்சென்றார்கள். விதிகளை மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தினசரி மார்க்கெட்

கோபியில் தினசரி மார்க்கெட் பெரியார் திடலில் செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் தினசரி மார்க்கெட் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று காய்கறிகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் தினசரி மார்க்கெட்டில் குவிந்தார்கள்.

இதில் பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. கும்பலாக நின்று காய்கறிகள் வாங்கினார்கள். சிலர் முககவசம் அணிந்திருக்கவில்லை.

கடும் நடவடிக்கை

கோபி பகுதியில் நாள்தோறும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாதது மேலும் கொரோனா எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே கோபி நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் தினசரி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்திருக்கிறார்களா?, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா? என்று கண்காணிக்கவேண்டும். கொரோனா விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.