மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 275 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 275 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுங்கச்சாவடி கண்காணிப்பாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 16,225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 15 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையில் பலரின் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் ஒரே நாளில் 275 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 16,500-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவுக்கு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி கண்காணிப்பாளர் இறந்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:-

உளுந்தூர்பேட்டை அருகே மல்லிகா கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன் மகன் ஜெயபிரகாஷ் (வயது 40). இவர் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெயபிரகாஷ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சங்கச்சாவடியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.