புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பெரியகள்ளிப்பட்டி ஊராட்சி ஓலக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் சசிகலா. விவசாயி. இவர் சொந்தமாக 6 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள தோட்டத்துக்கு ஓட்டிச்சென்றார். பின்னர் மாடுகளை மேயவிட்டு விட்டு சற்று தூரத்தில் நின்றுகொண்டு இருந்தார்.
அப்போது திடீர் என மாடுகள் மேய்ந்துகொண்டு இருந்த இடத்தில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. உடனே சசிகலா அங்கு ஓடிச்சென்று பார்த்தார். அப்போது ஒரு மாட்டின் வாய்தாடை கிழிந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. யாரோ மர்ம நபர்கள் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுவெடிகளை போட்டுவைத்திருக்கிறார்கள். அதை தீவனம் என்று பசுமாடு கடித்துவிட்டதால் வெடி வெடித்து இறந்துவிட்டது தெரிந்தது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.