கோவை,
கோவை சி.எஸ்.ஐ. பிஷப்பாக திமோத்தி ரவீந்தர் உள்ளார். கோவை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் ஒருங்கிணைந்து இருந்தன. இந்த நிர்வாகத்தின் கீழ் 200-க்கும் மேலான ஆலயங்கள், 10 கல்லூரிகள், ஏராளமான சி.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் உள்ளது.
இந்தநிலையில் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி சேலத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக மற்றொரு திருமண்ட லம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சி.எஸ்.ஐ. உறுப்பினர்கள் ஏராளமானவர்கள் நேற்று கோவை ரேஸ்கோர்சில் உள்ள பிஷப் திமோத்தி ரவீந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பிஷப் இல்லை. அவர், கோத்தகிரி சென்று விட்டார்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஜேக்கப் லிவிங்ஸ்டன் கூறியதாவது:-
கவுன்சில் அனுமதி இல்லாமல் திருமண்டலத்தை அவசர, அவசரமாக 2 ஆக பிரித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக கோவை வருமாறு பிஷப் கூறினார். அதன்பேரில் நாங்கள் கோவை வந்தோம். நாங்கள் வருவது தெரிந்தும் வேண்டும் என்றே பிஷப் கோத்தகிரிக்கு சென்றுவிட்டார். ஒடுக்கப்பட்ட வர்கள் மேலும் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதை ஏற்கமாட்டோம். சட்ட ரீதியாக அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர்கள், பூட்டப்பட்டு இருந்த பிஷப் அலுவலகத்துக்கு மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டினர். இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உடனே அவர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கப்போவதாக கூறினர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரதிநிதிகள் 10 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அவர்கள், கலெக்டர் ராஜாமணியை சந்தித்து மனு அளித்தனர்.
அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், இந்த பிரச்சினை குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என்றார். அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.