புதுக்கோட்டை 
மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம் தாதம்பேட்டை காமராஜர் தெருவில் காளியம்மன் கோவில் அருகே உள்ள தெருக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், தாதம்பேட்டை, அரியலூர்.

நோய் பரவும் அபாயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையம் பின்புறம் உள்ள வீதியில் கழிவுநீர் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் மற்றும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கே.புதுப்பட்டி, புதுக்கோட்டை.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிழக்கு புதியகாலனி பகுதியில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் சிரமத்திற்கும் ஆளாகி வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகரம்சீகூர் புதியகாலனி பகுதியில் கழிவுநீர் வடிகால்வாய் அமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இராஜேந்திரன், அகரம்சீகூர், பெரம்பலூர்.

குண்டும், குழியுமான தார்சாலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வடுகப்பட்டியின் தார் சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடுகப்பட்டி, திருச்சி.

மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர் காலனி அண்ணாநகர் விநாயகர் கோவில் அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. இதன் கிளைகள் வளர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் இதன் வழியாக தினமும் கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் சென்று வருகின்றன. மரத்தின் கிளை முறிந்து விழுந்தால் பெரும் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் மரக்கிளைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அண்ணாநகர், கரூர்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

திருச்சி இனாம்குளத்தூர் பெரிய ஏரியில் இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த குப்பைகள் காற்றில் பறந்து சென்று ஆங்காங்கே விழுவதினால் இப்பகுதி முழுவதும் குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், இனாம்குளத்தூர், திருச்சி.

சாக்கடை கால்வாய்க்கு சிலாப் அமைக்கப்படுமா?

கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள சுங்ககேட் முதல் தாந்தோணிமலை வரை சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சாலையின் ஒரு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் மில் கேட் அருகில் உள்ள மெயின் ரோட்டில் இருந்து சிவசக்தி நகர் கிழக்கு பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலையில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி முடிந்து பல மாதங்களாகியும் அதன் ஒரு பகுதி சிமெண்டு ஸ்லாப்போட்டு மூடாமல் அப்படியே விட்டு விட்டதால் மெயின் ரோட்டிலிருந்து சிவசக்தி நகர் கிழக்கு பகுதிக்கு செல்லும் கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வளைவில் திரும்பும்போது திடீரென நிலைதடுமாறி மூடாமல் உள்ள சாக்கடை கால்வாயில் விழும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

புதுக்கோட்டை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் முள்ளூர் மருத்துவக்கல்லூரி புதுக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு கடந்த 15 நாட்களாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ், முள்ளூர், புதுக்கோட்டை.

உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

திருச்சி பாலக்கரை 25-வது வார்டு துரைசாமிபுரம் எக்ஸ்டன்ஷன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டும்போது வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அய்யப்பன், துரைசாமிபுரம், திருச்சி.

மேம்பாலத்தில் பள்ளம்

திருச்சி மரக்கடை மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளமாக காணப்படுகிறது. தினமும் தில்லைநகர், வயலூர், அரசு மருத்துவமனை, தென்னூர், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் இந்த பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

புதர்மண்டிய சார்பதிவாளர் அலுவலகம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை சுற்றிலும் அடர்ந்த செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. உப்பிலியபுரம் மற்றும் பச்சைமலை தென்புறநாடு உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள ஆவண பதிவு பணிகளால், இந்த அலுவலகம் காலை முதல் மாலை வரை சுறுசுறுப்புடன் இயங்கிவருகிறது. பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் காத்திருக்க வசதியின்றி, அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளின்றி காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி.

புதர்மண்டிய ரெயில்வே குடியிருப்பு

திருச்சி கல்லுக்குழி பகுதியில் ரெயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் பல வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அத்துடன் புதர்மண்டி அவை இருப்பதால் விஷபூச்சிகள் தொல்லை உள்ளது. எனவே சேதமடைந்த குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாரிசெல்வம், கல்லுக்குழி, திருச்சி

செயல்படாத தானியங்கி சிக்னல்

திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் தானியங்கி போக்குவரத்து சிக்னல் உள்ளது. ஆனால் இது செயல்படுவதில்லை. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த சாலையில் அதிக போக்குவரத்து உள்ளது. குறிப்பாக சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து புதுக்கோட்டை சாலைக்கு செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் செயல்படாமல் உள்ள தானியங்கி சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமா?

லோகேஸ்வரன், ரன்வேநகர், திருச்சி.