மீண்டும் வெளிச்சம் கிடைத்தது
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா கன்னிவாக்கம் கிராமம் ரியல் வீவா சிட்டி அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் வழியில் உள்ள தெருவிளக்கு கடந்த 1 மாதமாக எரியாமல் இருந்த செய்தி, தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இந்த நிலையில் மின்வாரியம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக அந்த தெருவிளக்கு மீண்டும் எரிய தொடங்கியிருக்கிறது. இதற்காக அப்பகுதி மக்கள் மின்வாரியத்துக்கும், தினத்தந்தி பத்திரிகைக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்பு பெட்டிகள் சீரமைக்கப்படுமா?
சென்னை மடுவங்கரை கிண்டி மசூதி காலனி 5-வது தெருவில் உயரம் குறைவான சிறிய மின் இணைப்பு பெட்டி பராமரிப்பின்றி இருக்கிறது. கதவு பெயர்ந்து, வயர்கள் நீட்டிக் கொண்டு ஆபத்தான முறையில் காட்சியளித்து வருகிறது. அதேபோல சின்ன நீலாங்கரை குப்பம் தெற்கு தெரு, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2-வது மெயின் சாலை மற்றும் சென்னை அயனாவரம் ராஜூ தெருவில் (கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் ரோடு எதிரில்) உள்ள மின் இணைப்பு பெட்டிகளும் மோசமான நிலையிலேயே உள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பு கருதி இந்த மின் இணைப்பு பெட்டிகளை உடனடியாக சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்.
மின்வாரியம் கவனிக்குமா?
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் மெயின் ரோடு தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே உள்ள மின்கம்பம் பழுதடைந்து இருக்கிறது. மரங்கள் சூழ்ந்த நிலையிலும், சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி கள ஆய்வில் ஈடுபட்டு இந்த மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பி.கிஷோர், மடிப்பாக்கம்.
நாய்கள் தொல்லையால் அவதி
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை காவல்சேரி ரோடு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி சீனிவாச நகர், வெங்டேஸ்வரா நகர் பகுதியில் தெருநாய்களின் தொல்லை மிகுதியாக இருக்கிறது. இரவு நேரங்களில் நாய்கள் தொடர் ஊளையிட்டு வருவதால் மக்கள் தூக்கத்தை தொலைக்க நேரிடுகிறது. தெருவில் நடந்து செல்வோருக்கும் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பொதுமக்கள்.
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
திருவள்ளூர் மாவட்டம் வானகரம் ஊராட்சிக்குட்பட்ட சமயபுரம் 7-வது குறுக்குத்தெருவில் சாலையோரம் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் மிகுதியாக கொட்டப்பட்டு இருக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்றவும், மேலும் அங்கு குப்பைகள் கொட்டாமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்.
தபால் நிலையத்தில் பிரிண்டர் தொடர் பழுது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேரு பஜாரில் (போலீஸ் நிலையம் பின்பிறம்) துணை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல வாரங்களாக பிரிண்டர் எந்திரம் அடிக்கடி பழுதாகிறது. கடந்த 3 நாட்களாக சுத்தமாக வேலை செய்யவே இல்லை. பொதுமக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு புதிய, தரமான பிரிண்டரை கொண்டுவர தபால்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- ஏ.தரணிதரன், ஆவடி.
குடிநீர் வருவதே கிடையாது
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும்பாலான இடங்களில் வீடுகளில் மெட்ரோ குடிநீர் வருவதே கிடையாது. இதனால் குடிநீர் கேன்களையும், லாரிகள் மூலம் வரும் தண்ணீரையுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் இதுகுறித்து முறையிட்டு பார்த்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியாவது மக்களின் சிரமங்களை போக்கும் வகையில் முறையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படுமா?
- பிரேம்குமார், கூடுவாஞ்சேரி.
கழிவுநீர் தொல்லையால் அவதி
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட பழைய பல்லாவரம் பெருமாள் நகர் 5-வது மெயின் ரோடு மற்றும் முதல் குறுக்கு சந்தில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் மிகுதியாக உள்ளது. கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதிவாசிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?
- பொதுமக்கள், பல்லாவரம்.
கழிவுநீர் கால்வாய் தேவை
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அன்பு நகர், பெரியார் தெருவில் முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாத காரணத்தினால் சாலையிலேயே கழிவுநீர் செல்கிறது. இதனால் பல தொற்று நோய்களுக்கு இப்பகுதிவாசிகள் ஆளாகிறார்கள். மேலும் அதிக துர்நாற்றமும் வீசுகிறது. கொசு தொல்லையும் இருக்கிறது. இக்கழிவுநீரை அகற்றுவதுடன், முறையான கால்வாய் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள்.