மாவட்ட செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி பொதுமக்கள் புகார்கள் பகுதி

ஆபத்தான பள்ளம்

காட்பாடி வள்ளிமலை ரோட்டில் ஒரு அரசு வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கிக்கு அருகில் கடந்தசில நாட்களுக்கு முன்பு சாலையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் கழிவுநீர் கால்வாய் சிமெண்டு சிலாப்புகளை உடைத்து நான்கு இடத்தில் இருந்த அடைப்பை அகற்றிய மண்ணை வெளிய ரோட்டில் கொட்டி வைத்தனர். ஆனால் 4 இடத்திலும பள்ளத்தை மூடாமல் விட்டுள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளத்தை அதிகாரிகள் மூட வேண்டும்.

-பி.துரை, கல்புதூர்.

வாணியம்பாடி நகராட்சி 17-வது வார்டு முஸ்லிம்பூர் பகுதியில் உள்ள மலங்ரோட்டில் ஓரிடத்தில் சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம் உள்ளது. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழாமல் இருக்க மரத்துண்டுகளை போட்டு மறைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடி சாலைய சரி செய்ய வேண்டும்.

-ஏஜாத்அகமது, சமூக ஆர்வலர், வாணியம்பாடி.

ஆபத்தான மின்கம்பம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அப்பாய் தெருவில் ஒரு மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதில் உள்ள சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி அமைப்பார்களா?

-நாராயணன், மோசூர்.

பேரணாம்பட்டு நகரம் திரு.வி.க.நகர் பாண்டியன் தெருவில் உள்ள ஒரு மின்கம்பம் சேதம் அடைந்துள்ளது. அதன் அருகில் கல்யாண மண்டபம், அரசு மருத்துவமனை, வங்கி ஆகியவைகள் உள்ளன. சேதம் அடைந்த மின்கம்பம் இருக்கும் இடம் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதியாகும். பலத்த காற்று வீசும்போது கீழே சாய்ந்து விட வாய்ப்புள்ளது. சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

-ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா பள்ளூர் கிராமத்தில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து பல நாட்களாக உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மாற்றி அமைக்க வேண்டும்.

-பா.சத்ரியன், பள்ளூர்.

பழுதடைந்த சிறு மின்விசை தொட்டி

அணைக்கட்டு தொகுதி வசந்தநடை கிராமத்தில் ஒரு சிறுமின்விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டியால் 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பயன் அடைந்தனர். தற்போது அந்தத் தொட்டி பழுதடைந்துள்ளது. வெயில் காலத்தில் மக்கள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறு மின்விசை தொட்டியை பழுதுப்பார்த்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வண்டும்.

-நாராயணன், அணைக்கட்டு.

பழுதான அடிபம்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வழுர்அகரம் தொடக்கப்பள்ளி அருகில் மாணவ-மாணவிகள் அடிபம்பை பயன்படுத்தி வருகிறார்கள். அந்தப் பம்பு நீண்ட நாட்களாக பழுதடைந்துள்ளது. மாணவ-மாணவிகள் மதிய நேரத்தில் சாப்பிட்டு விட்டு டிபன்பாக்ஸ், தட்டுகளை கழுவ தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். குடிப்பதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. ஊராட்சி நிர்வாகம் அடிபம்பை சரி செய்து தருமா?

-தேவா, வழுர்.

குப்பைகளை அகற்ற வண்டும்

திருவண்ணாமலை வங்கிக்கால் பகுதியில் வேலூர் சாலையில் மின்நகர் 5-வது தெருவின் முகப்பில் குப்பகள், மீன் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் இரு புறமும் கால்வாய் வசதி இல்லை. கழிவுநீரும், குப்பகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. அங்குள்ள குப்பைகளை அகற்றி, கால்வாய் வசதி செய்து தர வேண்டும்.

-நா.சின்னத்துரை, திருவண்ணாமலை.

தினத்தந்திக்கு நன்றி

வேலூர் அருகே சத்துவாச்சாரி குருத்தோப்பில் 8-வது தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தில், மின்விளக்கு கம்பி சேதம் அடைந்து தொங்கி கொண்டு இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கை சரி செய்தனர். செய்தி வளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் நன்றி.

-ராஜீவ்காந்தி, வேலூர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள உயர்கோபுர மின் விளக்கு எரியவில்லை என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் பேரூராட்சி செயல் அலுவலர் முகமதுரிஸ்வான், பேரூராட்சி மன்ற தலைவர் ராணிசண்முகம் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பயனால் தற்போது உயர் கோபுர மின் விளக்கு இரவில் பிரகாசமாக ஒளிர்கிறது. செய்தி வளியிட்ட தினத்தந்திக்கும், மேற்கண்ட அதிகாரிகளுக்கும் நன்றி.

-ஆட்டோ. முத்து, சமூக ஆர்வலர், போளூர்.