ராணிப்பேட்டைக்குள் பஸ்கள் வருவது இல்லை
ராணிப்பேட்டை செல்பவர்கள் ஆற்காடு பைபாஸ் அல்லது வாலாஜாவில் இறங்க வேண்டிய நிலை உள்ளது. அதில் சென்னையில் இருந்து வேலூர் மார்க்கமாக செல்லும்போது, ஆற்காடு பைபாஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடப்படுவோர் சுமைகளை தூக்கிக்கொண்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிலையத்துக்கு நடந்து சென்று டவுன் பஸ் ஏற வேண்டும் அல்லது எதிர்ப்புறம் மார்க்கத்துக்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து இணைப்புச் சாலை வழியாக 800 மீட்டர் தூரும் நடந்து செல்ல வேண்டும். பகலில் எப்படியோ சிரமப்பட்டு பயணிகள் வந்து விடுகின்றனர். ஆனால் இரவில் ராணிப்பேட்டைக்கு வருபவர்கள் மிகச் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே வேலூர்-சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள், சென்னை - வேலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் ராணிப்பேட்டைக்குள் வந்து செல்ல வண்டும்.
-எம்.எஸ்.ஜானகிராமன், ராணிப்பேட்டை.
கோவில் தெப்பக்குளம் ஆக்கிரமிப்பு
கலசபாக்கம் தாலுகா எலத்தூர் மோட்டூர் வில்வாரணி சிவசுப்பிரமணியசாமி கோவில் தெப்பக்குளம் புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெப்பக்குளத்தில் விடப்படுகிறது. பக்தர்கள் தெப்பக்குள நீரை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெப்பக்குள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
-சண்முகம், எலத்தூர்.
உடைந்து தொங்கும் தெருவிளக்கு
வேலூர் அருகே சத்துவாச்சாரி குருதோப்பில் உள்ள 8-வது தெருவில், மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு உடைந்து தொங்குகிறது. மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜீவ்காந்தி, வேலூர்.
6 மாதமாக அவதி படும் மக்கள்
வேலூர் சத்துவாச்சாரி குரு தோப்பு பகுதியில் பாரதிநகர் உள்ளது. இங்குள்ள 6-வது தெருவில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இன்னும் பணிகளை முடிக்காமல், பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல வசதியும் செய்யப் படாததால் பெரும் அவதிப்படுகிறார்கள். விரைவாக பணிகளை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குருமூர்த்தி, வேலூர்.
ஆபத்தான பயணம்
வந்தவாசியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் தென்னாங்கூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிக்கும், வீட்டுக்கும் செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் தினமும் பஸ்களின் ஏணிகளிலும், படிகளிலும் தொங்கி கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள். பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடும் வரை காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
-ஆம்புலன்ஸ் சுரேஷ், வந்தவாசி.
பாதியில் நிற்கும் கட்டிடப்பணிகள்
அணைக்கட்டு ஒன்றியம் ஊனை வாணியம்பாடி கிராமத்தில் 2016 -2017ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டும் பணி நடந்து வந்தது. ரெட்டியூரில் ரூ.9 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. பல ஆண்டுகளாக முடிக்கப்படாத சமுதாயக்கூடம், அங்கன்வாடி கட்டிட பணிகள் பாதியில் நிற்கிறது. கிடப்பில் போடப்பட்ட கட்டிட பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு விட வண்டும்.
-பாலசுப்பிரமணியம், ரெட்டியூர்.
குளக்கரையில் தடுப்புச்சுவர் கட்ட வண்டும்
ஆரணியில் உள்ள சூரியக்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் மழை நீரும், கழிவுநீரும் சர்ந்து கிடக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்தநிலையில் கோழிக்கழிவுகளை கொண்டு வந்து குளத்தில் வீசுகிறார்கள். கோழிக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
-விஜயன், ஆரணி.
ஆற்காடு சாலையில் பொங்கும் கழிவுநீர்
வேலூர் ஆற்காடு சாலையில் திப்பு மசூதி அருகில் இரண்டு இடங்களில் பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, மூடி வழியாக கழிவு நீர் பொங்கி வெளியேறுகிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர் டயர்களில் பட்டு மற்றவர்கள் மீது தெளிப்பால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். கால்வாய் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விவேகானந்தன், சைதாபேட்டை.
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
திருவண்ணாமலை ஒன்றியம் தச்சம்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியாகும். திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இணைக்கும் பகுதியாகவும் உள்ளது. பஸ் ஏற வருபவர்களுக்கு நிழற்குடை வசதி இல்லை. நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குருசாமி, தச்சம்பட்டு.
முழுநேர ரேஷன்கடையாக மாற்ற வேண்டும்
வேலூர் சாய்நாதபுரம் அருகே சாஸ்திரிநகரில் பகுதிநேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதில் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இந்தக் கடை செவ்வாய், சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படுகிறது. 2 நாட்களிலும் பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் அங்குக் குவிகின்றனர். மக்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்கிறார்கள். பகுதி நேரமாக செயல்படும் இந்தக் கடையை அனைத்து நாட்களிலும் செயல்படும் வகையில் முழுநேர ரேஷன் கடையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.எஸ்.பழனி மற்றும் பொதுமக்கள், வேலூர்.
சுகாதாரச் சீர்கடு
ஆரணி ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் இருந்து புதுகாமூர் தெரு, கே.கே.நகர் செல்லும் சாலையில் குப்பைகளை நகராட்சி நிர்வாகத்தினர் சரிவர அள்ளாததால் எங்குப் பார்த்தாலும் குப்பை கூளமாக காட்சியளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதில் பன்றிகள் மேய்ந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. நோய் பரவும் அபாயமும் உருவாகி வருகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-ராகவேந்திரன், ஆரணி.