புதுச்சேரி,
அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதுடன் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவிடாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறார், என்று கவர்னர் கிரண்பெடி மீது முதல்-அமைச்சர் நாராயணசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்தநிலையில் மக்களுக்கு தேவையான 36 விதமான கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும் என்று கவர்னருக்கு நாராயணசாமி கடிதம் எழுதினார்.
இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கடந்த 13-ந் தேதி முதல் கவர்னர் கிரண்பெடியை கண்டித்து முதல் அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் மாளிகை முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
நேற்று 5-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் பகல் இரவு என அங்கேயே இருந்து வருகின்றனர். தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொலைபேசி மூலமும், நேரிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.