கடலூர்,
கடலூர் கிழக்கு மாவட்ட டி.டி.வி. தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்த நாள் விழா, இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரனுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு நகர செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத் தலைவர் ஜி.ராமலிங்கம் வரவேற்றார். நகர அவைத்தலைவர் பாஷா, நகர இணை செயலாளர் காயத்ரி பன்னீர்செல்வம், நகர துணை செயலாளர்கள் சந்தானம், ஜெயசுதா, நகர பொருளாளர் ராஜவேல், மாவட்ட பிரதிநிதிகள் துர்காதேவி, தயாளன், மனோகரன், நகர பேரவை செயலாளர் ராபின் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சி.கே.சுப்பிரமணியன், புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-
திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய வெற்றி பெற்றார். தற்போது நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். எம்.ஜி.ஆருக்கு இளைஞர்கள் துணை நின்றார்கள். அதேபோல் தினகரன் பின்னாலும் இளைஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் கிடையாது. ஆனாலும் இளைஞர்கள் கிரிக்கெட்டை விரும்புகிறார்கள். அதேபோல் ஆட்சியில் இல்லாவிட்டாலும் தினகரனை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.
தமிழக மக்கள் அவரிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவராக தினகரன் உள்ளார். தற்போது உள்ள ஆளுங்கட்சி நீதிமன்றங்களில் படிக்கட்டுகளில் கிடக்கிறது. ஜெயலலிதா இருந்த போது, உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், நீட் தேர்வுக்கு கடுமையாக எதிர்த்தார். ஆனால் தற்போது உள்ள அரசு அனைத்து திட்டங்களுக்கும் அனுமதி வழங்கி உள்ளது. 90 சதவீதம் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். ஆட்சியில் அமர வைத்த தினகரனுக்கும், சசிகலாவுக்கும் துரோகம் செய்து விட்டார்கள். பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விட்டது இந்த அரசு. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளது. நிதி பற்றாக்குறை என்று அவர்களுக்கு மட்டும் சம்பளத்தை உயர்த்துவது நியாயமா? என்று அனைத்து கட்சியினரும் கேட்கிறார்கள். பாரதீய ஜனதாவுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள். இமயமலைக்கு செல்கிறவர்களை அழைத்து வந்தாலும் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் சக்தி பெற்ற தலைவராக தினகரன் உள்ளார்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-
தினகரன் வெற்றியால் மற்ற கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பா.வளர் மதிக்கு பெரியார் விருது வழங்கியதை எண்ணி வேதனை அடைகிறேன். பாரதீய ஜனதா கட்சியினருக்கு தினகரன் மீது கோபம் கிடையாது. கடந்த தேர்தலில் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவித்தார். அவர் மறைவுக்கு பிறகு கட்சியையும், திராவிட இயக்கத்தையும் வழிநடத்தும் சக்தியாக தினகரன் உருவெடுத்துள்ளார். அதனால் தான் தினகரனை அழிக்க பாரதீய ஜனதா கட்சி வருமான வரிசோதனை போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு புகழேந்தி பேசினார். கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சுமதி, துணை செயலாளர் ராமசாமி, மாவட்ட மாணவரணி வினோத்ராஜ், செயற்குழு உறுப்பினர் சுஜாதா, பொதுக்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், சூரியமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்ஆறுமுகம், இளைஞரணி சிவகுருநாதன், தங்க.பாலா, வினோத், ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், வக்கீல்கள் சத்தியராஜ், சத்தியா, இளைஞரனி சுனோபா, நகர செயலாளர் ரமேஷ், சக்திவேல், ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், சாமிக்கண்ணு ஆகியோர் நன்றி கூறினர்.