மாவட்ட செய்திகள்

வண்டலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு காப்பாற்ற முயன்ற பெண்ணும் உயிரிழந்தார்

வண்டலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

வண்டலூர்,

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் அனிஷ். இவர் வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் சாலையோரமாக குடும்பத்துடன் தங்கி பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவரது மகன் அப்துல் (வயது 8).

நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் உள்ள தரை கிணற்றில் அப்துல் தவறி விழுந்தான்.

இதை பார்த்த அதே பகுதியில் தங்கியிருந்த அரியானா மாநிலத்தை சேர்ந்த கதிஜா (வயது 21), என்ற பெண் கிணற்றில் தவறி விழுந்த அப்துல்லை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். இதில் சிறுவன் அப்துல் மற்றும் கதிஜா உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்து இறந்து போன சிறுவன் அப்துல், காப்பாற்ற முயன்ற பெண் கதிஜா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.