கிணத்துக்கடவு,
போத்தனூர்-பொள்ளாச்சி இடையே இருந்த மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்த வழிதடத்தில் ஒரே ஒரு பயணிகள் ரெயில் மட்டுமே கோவையில் இருந்து புறப்பட்டு போத்தனூர்,கிணத்துக்கடவு, பொள்ளாச்சிக்கு செல்கிறது.
இந்த வழித்தடத்தில் அரசம்பாளையம் முதல் மைலேறிபாளையம் வரை உள்ள ரெயில்வே பாதையில் 4 கிலோமீட்டர் தூரத்தில் ரெயில் தரைமட்டத்தில் இருந்து 20 மீட்டர் பள்ளத்தில் செல்கிறது.இந்த பகுதியில் தண்டவாளங்கள் பாறைகளுக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது.
மிதமான வேகத்தில் இயக்க அனுமதி இந்த பகுதிக்கு ரெயில் வரும் போது மிதமான வேகத்தில் செல்கிறது. ஏற்கனவே இந்த பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஆய்வு செய்த போது பள்ளமான பகுதியில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் செல்ல அனுமதி வழங்கினார். தற்போது இந்த பள்ளமான பகுதியில் 40 கிலோமீட்டர் தூர வேகத்தில் ரெயில் சென்றுவரு கிறது.
இந்த நிலையில் மைலேறிபாளையம்-அரசம்பாளையம் இடையே கிணத்துக்கடவுக்கு வரும் வழிதடத்தில் பாறைகள் அதிகம் அமைந்துள்ள பள்ளமான பகுதியில் பக்கவாட்டில் உள்ள பாறைகள் பெயர்ந்து கீழே விழும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்தது. இந்த பள்ளமான பகுதியில் ரெயில் செல்லும் போது அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே தற்போது பயணிகளின் அச்சத்தை போக்க மைலேறிபாளையம்-அரசம்பாளையம் இடையே செல்லும் ரெயில் பாதையில் ஓரத்தில் பாறைகளை விழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து ரெயில்வே அதிகாரி கூறிய தாவது:-
போத்தனூர்-கிணத்துக்கடவு இடையே மைலேறிபாளையம்-அரசம்பாளையம் இடையில் 20 கிலோ மீட்டர் பள்ளத்தில் செல்லும் ரெயில்வே பாதையை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் பார்வையிடும்போதே இந்த பகுதியில் பாறைகள் எதுவும் சரிந்து விடக்கூடாது .அதற்கு மாற்று ஏற்பாடாக அதிக பள்ளமான பகுதியில் இருபுறங்களிலும் உள்ள பாறைகள் விழாத அளவிற்கு இரும்பு கம்பி வலை அமைக்க ஆலோசனை வழங்கினார்கள்.
தற்போது இந்தவழித்தடத்தில் பாறைகள் விழுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் இந்த வழித்தடத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க தற்போது சுமார் 1 கிலோமீட்டர் தூரம் இரும்பு கம்பி வலைகள் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது.
இந்த பணிகள் ஒரு சில நாட்களில் தொடங்கும். அதன்பின்னர் இந்த பகுதியில் சோதனை ரெயில் விடப்பட்டு ஆய்வு முடிந்ததும் பள்ளமான இந்த இடத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரெயில் பாதை பணிகள் முடிந்தும் இதுவரை ஒரே ஒரு பயணிகள் ரெயில் மட்டும் விடப்பட்டு உள்ளது. இந்த பயணிகள் ரெயில் மதியம் மட்டும் இயக்கப்படுவதால் பயணிகள் யாருக்கும் பயன் இல்லை.
எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பயணிகள் ரெயில்களை கோவை-பொள்ளாச்சி இடையே இயக்கினால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள். அதே போல் போத்தனூர்-பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு என்ற ஒரே ஒரு ரெயில் நிலையம் மட்டும் தான் உள்ளது.
செட்டிப்பாளையம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் கூடுதலாக ரெயில் நிலையங்களை திறக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.
அப்போது தான் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள இந்த அகல ரெயில் பாதை பணியால் பொதுமக்களுக்கும், அரசுக்கும் லாபம் கிடைக்கும். அதே போல் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொள்ளாச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கவும் முன் வர வேண்டும் என்றனர்.