மாவட்ட செய்திகள்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற 41 பேர் கைது

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற 41 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கோவையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அறிவித்து இருந்தனர்.

இதையொட்டி ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் ரெயில் மறியலுக்கு முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ரெயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் ரெயில் மறியலுக்கு முயன்ற 15 பேரை கைது செய்தனர்.

பாரத் சேனா அமைப்பு

அதேபோல் கோவை ரெயில் நிலையத்துக்கு பாரத் சேனா அமைப்பின் நிர்வாகிகள் கோவை மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் வந்தனர். பின்னர் அவர்கள் தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் மறியலுக்கு முயன்ற பாரத் சேனா அமைப்பினரை தடுத்து நிறுத்தி 26 பேரை கைது செய்தனர். கோவையில் ரெயில் மறியலுக்கு முயன்ற மொத்தம் 41 பேர் கைது செய்யப் பட்டனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை அனைத்து கல்லூரி மாணவர் பேரவை சார்பில் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பேரவை ஒருங்கிணைப்பாளர் ஸ்டான்லி ஜோசப் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது ஜல்லிக்கட்டு தடையை உடனே நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.