நாகர்கோவில்,
தமிழகத்தில், நவோதயா பள்ளிக்கூடங்களை தொடங்க வலியுறுத்தியும், நவோதயா பள்ளிக்கூடங்களை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளை கண்டித்தும் குமரி மாவட்ட பா.ஜனதா இளைஞரணி சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி தலைவர் நிலேஷ்ராம் தலைமைதாங்கினார். பொதுச்செயலாளர் வின்சென்ட், ராஜேஸ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில், மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், பொதுச் செயலாளர் மணி சுவாமி, நகர தலைவர் ராஜன், நகர பொதுச்செயலாளர் அஜித், இளைஞரணி தலைவர் சிவபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.