திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் உற்பத்திக்கான காரணிகள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீடுகளில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள், பிளாஸ்டிக் தொட்டிகள் ஆகியவற்றிலும் மாநகராட்சி பணியாளர்கள் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாநகராட்சி சார்பில் ஏராளமானோர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருப்பூர் 27-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் சென்று டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் ஆய்வு செய்து, தேக்கி வைத்துள்ள குடிநீர் தொட்டிகளில் மருந்து தெளித்தனர். அவர்கள் திருநீலகண்டபுரம் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் அந்த வீட்டில் உள்ள தண்ணீர் சேமித்து வைத்துள்ள தொட்டிகளை ஆய்வு செய்தனர். ஆனால் இதற்கு வீட்டின் உரிமையாளர் சக்திவேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், பணியாளர்களுக்கு மிரட்டல் விடுத்தது மட்டுமின்றி, தகாத வார்த்தைகளாலும் அவர்களை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து பணியாளர்கள் மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தங்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு வந்த அவர்கள், போலீசாரிடம் புகார் மனு ஒன்றையும் கொடுத்தனர்.
அந்த மனுவில், பெண் பணியாளர்களாகிய எங்களை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.