குன்னத்தூர்,
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே ஆதியூர் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன். இவர் எலெக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உஷா. இவர்களின் மகள்கள் வைஷ்ணவி(வயது 11), காயத்திரி (9). அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வைஷ்ணவி 6-ம் வகுப்பும், காயத்திரி 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்த நிலையில் காயத்திரிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட் டது. உடனே அவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
பரிதாப சாவு
இதைத்தொடர்ந்து அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த காயத்திரி சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதன் காரணமாக குன்னத்தூர் ஆதியூர் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு, சுகாதாரப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.