மாவட்ட செய்திகள்

துணை கலெக்டர், ஆர்.டி.ஓ. உள்பட 14 பேர் மீது வழக்கு

பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் துணை கலெக்டர், ஆர்.டி.ஓ. உள்பட 14 பேர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

தேனி:

அரசு நிலம் அபகரிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை நடத்தினார். அதில், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் சிலர் அபகரித்ததாக தெரியவந்தது. இந்த நிலத்தின் அரசு மதிப்பு ரூ.1 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் என கணக்கிடப்பட்டது.

அதுபோல், தாமரைக்குளத்தில் ரூ.60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 60 ஏக்கர் அரசு நிலம், கெங்குவார்பட்டியில் ரூ.8 கோடியே 62 லட்சம் மதிப்பில் 13 ஏக்கர் அரசு நிலத்தையும் அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்ததும் தெரியவந்தது. இந்த 3 இடங்களிலும் சுமார் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது.

சப்-கலெக்டர் புகார்

இதையடுத்து இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த நிலங்கள் மீட்கப்பட்டு அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. இந்த அரசு நிலங்களை அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து, கணினி பட்டா வழங்கப்பட்டதும், அதன் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம், தனித்தனியாக 3 புகார்களை பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்தார். அந்த புகார்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் விசாரணை நடத்தினார்.

அதிகாரிகள் மீது வழக்கு

விசாரணையை தொடர்ந்து இந்த மோசடி நடந்த கால கட்டத்தில் பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உள்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், ஆனந்தி தற்போது பழனி ஆர்.டி.ஓ.வாக பணியாற்றி வருகிறார். ஜெயப்பிரிதா திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல் ஆகியோர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.

அரசு நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி