மாவட்ட செய்திகள்

தொடர் ஆய்வுகள் நடத்திய போதிலும் குடிமராமத்து செயல்பாட்டில் போதிய வேகம் இல்லை: 2 வாரத்துக்குள் பணிகள் முடியுமா?

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்திய போதிலும் குடிமராமத்து பணிகளில் போதிய வேகம் இல்லாததால் திட்டமிட்டுள்ளப்படி அடுத்த 2 வாரங்களுக்குள் பணிகள் முழுமையாக முடிவடையுமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

விருதுநகர்,

மாநிலம் முழுவதும் நீர்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கவும், நிலத்தடி நீர் வளத்தை பெருக்கவும், மழைநீரை சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நல்ல நோக்கத்தோடு நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகளை செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.26 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 65 பொதுப் பணித்துறை கண்மாய்கள், விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து பணி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 11 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 161 சிறு பாசன கண்மாய்கள் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும், கிராமப்புறங்களில் உள்ள 906 ஊருணிகள் தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் குடிமராமத்து செய்ய உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

குடிமராமத்து பணிகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் பாசன சங்கத்தினர் சார்பிலும், தொண்டு நிறுவனங்கள் மூலமும் செய்யப்பட்டு வருகிறது. அண்டை மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல் குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 20 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் இப்பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆனாலும் கிராமப்புறங்களில் வெளிநபர் தலையீடுகளால் குடிமராமத்து பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளர் பாலாஜி, கடந்த மாதம் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்ய வந்தபோது ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் குடிமராமத்து பணிகள் தனிநபரின் தலையீட்டால் முடக்கம் அடைந்துள்ளது என்று புகார் கூறப்பட்ட நிலையில் பணிகள் தொடர உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

மேலும் குடிமராமத்து பணிகளை முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றார். ஆனாலும் பணிகளில் குறிப்பிட தகுந்த முன்னேற்றம் ஏதும் ஏற்பட வில்லை.

இந்தநிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குடிமராமத்து பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது குடிமராமத்து பணிகளில் தீவிரம் காட்டாத அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்ததோடு, அரசு உத்தரவிட்டுள்ளப்படி குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் செயலாளர் மதுமதி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போதும் குடிமராமத்து பணி 20 சதவீதம் முடிந்துள்ள நிலையில் அதற்கான பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 16 கண்மாய்களுக்கு இதுவரை பணப்பட்டுவாடா செய்யப்படாதது ஏன்? என்றும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய கண்காணிப்பு அதிகாரி, இந்தநிலை நீடித்தால் குடிமராமத்து பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எவ்வாறு முடிவடையும் என்று கேட்டதோடு, அடுத்த 15 தினங்களுக்குள் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள விருதுநகர் மாவட்டத்தில் மழை பெய்யும் காலங்களில் கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரை தேக்கி குடிமராமத்து பணிகள் செய்யும் பாசன சங்கத்தினருக்கு தாமதம் இல்லாமல் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்திய அமைச்சர், பக்கத்து மாவட்டங்களில் 60 சதவீத பணிகள் நடந்துள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 10 முதல் 20 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது ஏன் என கேள்வி எழுப்பினார்.

பணிகளில் எதிர்பார்க்கும் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர் கள ஆய்வு நடந்த போதிலும் கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் குறிப்பிட தகுந்த முன்னேற்றம் ஏற்படாததற்கான காரணம் என்ன என்பதும் புரியவில்லை. எது எப்படி இருந்தாலும் தொடர் ஆய்வுகள் நடந்த பின்னரும் குடிமராமத்து பணியில் போதிய வேகம் இல்லாதநிலை உள்ளதால் அடுத்த வாரத்துக்குள் இப்பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இப்பணிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து பணிகள் விரைவாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இல்லையேல் அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் முடிவடையாவிட்டால் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...