மாவட்ட செய்திகள்

கோட்டை மாரியம்மன் கோவில் கருவறையை இடிக்க நடவடிக்கை ஊழியர்களுடன் பக்தர்கள் வாக்குவாதம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் கருவறையை நள்ளிரவில் இடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர். அவர்கள் கோவில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்கனவே கருவறையில் இருந்த அம்மனுக்கு பாலாலயம் செய்யப்பட்டு எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவருக்கு தினமும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. கோவிலின் பழமை மாறாமலும், கருவறையை இடிக்காமலும் திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோட்டை மாரியம்மன் அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு கோவிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் கடந்த 6 மாதமாக நிறுத்தப்பட்டன. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக கோவிலில் திருப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், கோவிலில் உள்ள கருவறையை நள்ளிரவில் திடீரென இடித்துவிட்டு அம்மன் சிலையை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக நேற்று இரவு 11 மணியளவில் தகவல் பரவியது. இதுபற்றி அறிந்த கோட்டை மாரியம்மன் அறக்கட்டளை நிறுவனர் வக்கீல் ரஜினிசெந்தில், பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கோபிநாத் மற்றும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். அப்போது, கோவிலின் முன்புறம், பின்புறம் உள்ள அனைத்து கதவுகளும் இழுத்து பூட்டப்பட்டிருந்தன. கருவறையை அருகில் வெளிச்சம் தெரியும் வகையில் மின்விளக்குகள் கட்டப்பட்டிருந்தது.

கோவில் செயல் அலுவலர் மாலா மற்றும் அதிகாரிகள் சிலர் அலுவலகத்திற்குள் இருந்தனர். அவர்களை வெளியே வரும்படி பக்தர்கள் சிலர் அழைத்தும், யாரும் வெளியே வரவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் சிலர் கோவிலின் கதவின் மேல் ஏறி உள்ளே செல்ல முயன்றனர். இதை அப்பகுதியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, உள்ளே இருந்து கோவில் ஊழியர்கள் நள்ளிரவு 12 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்களுடன் பக்தர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனை தொடர்ந்து சேலம் டவுன் போலீசில் வக்கீல் ரஜினிசெந்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் கருவறையை அதிகாரிகள் இடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருப்பணி என்ற பெயரில் கோவிலை இடிக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கருவறையை இடிப்பது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் அதையும் மீறி அதிகாரிகள் செயல்படுகிறார்கள். எனவே, அம்மன் கருவறையை இடிக்கக்கூடாது என்று பக்தர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கோவிலில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.