மாவட்ட செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு- ‘டீ'க்கடையில் புகை பிடித்தவர்களுக்கு அறிவுரை கூறினார்

புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் டீக்கடையில் புகை பிடித்தவர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் டீக்கடையில் புகை பிடித்தவர்களுக்கு அறிவுரை கூறினார்.

டி.ஜி.பி. சைலேந்திரபாபு

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கோவை சென்றார். அப்போது செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பதிவேடுகளை ஆய்வு செய்து போலீசாருக்கு அறிவுரை கூறினார்.

பொதுமக்களின் பணம் ஆன்லைனில் திருடப்பட்டால் 1930 என்ற எண்ணுக்கும், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் 1098 என்ற எண்ணுக்கும் அழைக்க பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். காவலன் செயலியை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் போலீசாரிடம் குறைகள் உள்ளதா? என்று கேட்டறிந்தார். அதன்பின்னர் காரில் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

புகை பிடித்தவர்களுக்கு அறிவுரை

முன்னதாக நேற்று காலை டி.ஜி.பி. சைலேந்திரபாபு டி.என்.பாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரி அணை பகுதியில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். இயற்கை அழகை ரசித்தவாறே சென்ற அவர் ரோட்டோரம் இருந்த டீக்கடையில் திடீரென சைக்கிளை நிறுத்தி அங்கு டீ சாப்பிட்டார். மேலும் கடையில் விற்பதற்காக தொங்கவிடப்பட்டு இருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டார்.

அப்போது டீக்கடையில் இருந்தவர்களுக்கு வந்திருப்பவர் போலீஸ் உயர் அதிகாரி என்று தெரியாது. வழக்கம்போல் டீக்கடை பெஞ்சில் அமர்ந்து புகபிடித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, புகை பிடிக்காதீர்கள் உடல் நலத்துக்கு கேடு. வாழைப்பழங்களை வாங்கி சாப்பிடுங்கள் என்று அறிவுர கூறிவிட்டு, சைக்கிள் பயிற்சியை தொடர்ந்தார்.

டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைக்கிள் பயிற்சி செய்வதும், ரோட்டோர கடையில் வாழைப்பழம் சாப்பிட்டபடி புகைப்பிடித்தவர்களுக்கு அறிவுரை வழங்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.