மதுரை,
அங்க அடையாளங்களை சரிபார்ப்பதற்காக நடிகர் தனுஷ் வருகிற 28ந்தேதி நேரில் ஆஜராகும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். எங்களுக்கு வயதாகிவிட்டதால், அவர் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இருதரப்பினரும் தனுஷின் பள்ளி அசல் சான்றிதழ்களை தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஏற்கனவே நடிகர் தனுஷின் பள்ளி மாற்று சான்றிதழை இருதரப்பினரும் தாக்கல் செய்தனர்.
நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழில் அவரது உடலில் உள்ள அங்கம், மச்சம் போன்றவை குறிப்பிடப்படவில்லை.
இதனையடுத்து மேலூர் தம்பதியர் தாக்கல் செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளனவா என்பதை கண்டறிந்து அது தொடர்பாக தனுஷ் தரப்பு வக்கீல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், மேலூர் தம்பதியர் கூறியுள்ளது அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. எனது இடது காரை எலும்பின் மேல் ஒரு மச்சமும், இடது முழங்கையில் ஒரு தழும்பும் இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எனது உடலில் அதுபோன்ற எவ்வித அங்க அடையாளமும் இல்லை. என்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு மேலூர் தம்பதியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு வருமாறு:
மனுதாரரின் உடலில் இருப்பதாக நாங்கள் குறிப்பிட்டுள்ள அங்க அடையாளங்களை எதிர்தரப்பினர் மாற்றி இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. வக்காலத்து மனுவில் இருப்பது மனுதாரரின் கையெழுத்து இல்லை. மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ் 1993ம் ஆண்டு பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அதாவது மனுதாரர் பிறந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
மனுதாரரின் மனுவில், தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி அவரது பெயரை கஸ்தூரிராஜா என்று 2015ம் ஆண்டு மாற்றியதாகவும், வெங்கடேஷ்பிரபு என்ற தனது இயற்பெயரை 2003ல் தனுஷ் என்று மாற்றியதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2002ம் ஆண்டில் வெளிவந்த துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் ஆவணங்கள் அனைத்திலும் கஸ்தூரிராஜா என்றும் தனுஷ் என்றுமே பெயர்களைக் குறிப்பிட்டுள்ளனர். இதன்படி பார்த்தால் அவர்களின் தகவல்கள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக இருப்பது தெரியவருகிறது.
மேலும், மனுதாரர் சமர்ப்பித்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் அவர் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், அவருடைய பெற்றோர் என்று கூறப்படும் கஸ்தூரிராஜாவிஜயலட்சுமி ஆகியோர் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் பள்ளி ஆவணங்களிலும் மனுதாரர் முறைகேடு செய்துள்ளது தெரியவருகிறது. அவர்கள் தாக்கல் செய்த குடும்ப அட்டை ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டவை.
இவ்வாறு பதில் மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் எதிர்மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளனவா என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. எனவே நடிகர் தனுஷ் வருகிற 28ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.